Sunday, February 7, 2016

இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போகும் பத்து அடிப்படைத் தேவைகள்

சக்திவேல் 

(10 basic needs of children going unmet today எனும் கட்டுரையின் தமிழாக்கம்.) 

என்ன மாதிரியான சில அடிப்படைத் தேவைகள் இன்று பெருமளவில் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போகின்றன?

1. அமைதியான சூழலின் தேவை 
குழந்தைகள் இயல்பாகவும் விழிப்புடனும் இருக்க அமைதியான சூழல் தேவை. ஆனால் நகர வீடுகளில் குழந்தைகள் பிறந்தது முதலே - ஓயாத தொலைக்காட்சிப்பெட்டியின் இரைச்சலாலும், பெரியவர்களின் இடைவிடாத பேச்சாலும், போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்களின் சத்தத்தாலும், கட்டிடங்கள் கட்டும் கட்டுமானச் சத்தத்தாலும் , அவர்களுக்கு நாம் வாங்கி கொடுக்கும் - பேட்டரியில் செயல்படும் பொம்மைகளாலும், இன்ன பிறவற்றாலும்  அவர்களின் மெல்லிய நுண்ணுணர்வுகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

குழந்தைகள் எரிச்சலடைவதற்க்கு முதன்மையான காரணமே இந்த ஓயாத இரைச்சலே.

குழந்தைகள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது எப்போதும் ஒரு அமைதியான காலைப்பொழுதாக இருப்பதையே விரும்புவார்கள். பெரியவர்களான நாம் விரும்புவதைப்போலவே. ஆனால் அநேகநேரங்களில் நாம் அவர்களிடம் பேச ஆரம்பித்துவிடுகிறோம் - அவர்களுக்கு பரிசுப்பொருள் காத்திருப்பதையோ, பள்ளி செல்வதற்கு தாமதமாக எழுந்ததற்காக திட்டிக்கொண்டோ - இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் .  இந்த இரைச்சலான தொடக்கமே குழந்தைகள் எரிச்சலாக உணர ஆரம்பிப்பதற்கு போதுமானது. குழந்தைகள் எழும்போது அவர்களின் அருகிலிருக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் தாங்களாகவே முதல் வார்த்தை சொல்லும் வரை இனிமையான நேரத்தை அவர்களின் படுக்கையில் செலவிடுங்கள். (பேசிக்கொண்டே இருக்கும் என்னைப் போன்ற பெற்றோருக்கு இது கொஞ்சம் சிரமமான விஷயம். ஆனால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்போது, அது மிக இனிய அனுபவம்).

இந்த அமைதியான சூழலில் (முழுதாக அனைத்து இரைச்சல்களையும் இல்லாமலாக்கமுடினும், முடிந்தவரை குறைத்துக்கொண்டு)  நாம் தொடங்கிவைக்கும் நாளே  பதற்றமில்லாத, பாதுகாப்பான சூழலை அமைத்துத்தரும்.

 நாமும் இயற்கையின் குரலை (இலைகளின் சலசலப்பை, பறவைகளின் குரல்களை, மழையை, தென்றல் காற்றை) உயிர்ப்புடன் உள்வாங்கிக் கொள்ளமுடியும்.   இயற்கையின் கீதங்கள் குழந்தையின் ஆன்மாவில் நுழைந்து பாடவைக்கும்.

2. நம்பிக்கையாக உணருவதற்க்கான தேவை
எல்லாக்குழந்தைகளுக்கும் நம்பிக்கையுடன் உணருவதற்கான தேவை இருக்கிறது. "பார், அதை உடைக்கப் போகிறாய்", அதை தொலைக்கப்போகிறாய், கீழே விழுந்துவிடுவாய்". இன்னும் பிறவற்றை தொடர்ச்சியாக அவர்களிடம் சொல்லிக்கொண்டேயிருப்பது அவர்களின் இந்த அடிப்படை தேவை நிறைவேறாமல் செய்துவிடுவதுடன்,  'நான் சிறப்பாக செயல்படுவதற்கு முயலுவேன் என்பதை உங்களால் நம்பமுடியாத' என்று
அவர்கள் உணரும் தருணங்களில் எரிச்சலடையவும் வைக்கும. மற்றும் அவர்கள் அதை உடைக்கும்போது, தொலைக்கும்போது, 'பார், நான் அப்பவே சொன்னேல்ல' என்று அவர்களிடம் சொல்வது மோசமான செயலாகும்.

உங்களின் அந்த வார்த்தைகள் அவர்களின் சுயத்தில் விழும் கடைசி அடியாகும்.

இதற்குப் பதிலாக 'உன்னால் செய்ய முடியும்' என்று நம் குழந்தைகளிடம் சொல்லும்போது சின்ன விஷயங்களில் அவர்களை நம்பும்போது, அவர்கள் தவறும்போது ' பரவாயில்லை சிலநேரங்களில் எல்லோரும் தவறவிடுவோம்'.

நீ மறுபடியும்  முயற்சிசெய்'  என்று சொல்லும்போது, உண்மையில் நமது குழந்தைகள் ' தன்னம்பிக்கையுடன், நம்பிக்கைக்குரியவர்களாக' வளர்வதற்கு உதவி செய்கிறோம்.  யாரோஒருவர் சொன்னதுபோல 'குழந்தையின்
தன்னம்பிக்கை மிக இலகுவான ஒன்று. ஒரு நொடியில் அதைப் பாதுகாக்கவும் அல்லது அழிக்கவும் முடியும்'.

குழந்தைகள் 'தன்னம்பிக்கைகுறைவானவர்கள், மற்றும் நம்புவதற்குச் சரியில்லாதவர்கள்'  என்ற உணர்வுடன் வளரும்போது, அவர்களின் தலையில் இன்னொரு குரல் சத்தமாக, இன்னும் சத்தமாக வளர்ந்து கொண்டேயிருக்கும். அது 'நீ தோற்று விடுவாய்' என்று சொல்லிக்கொண்டிருக்கும் நம் குரல்தான். இக்குரல் தோல்வியின் பயத்தால் புதிய விஷயங்கள் எதையும் முயற்சி செய்வதற்கு அவர்களை அனுமதிக்காது.  இந்த பயத்துடன் வளரும் ஒரு குழந்தை 'இயற்கையாகக் கற்றுக்கொள்ளும்' என்று எப்படி ஒருவர் எதிர்பார்க்கமுடியும் ?.

நமது குழந்தைகளிடம் 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தோ, விலையுர்ந்த பொருள்களையோ அல்லது அபாயகரமான பொருள்களை கொடுத்தோ நம்பவேண்டியதில்லை. அதேநேரத்தில் சிறிய பொருட்களை,  உடைந்தாலும் அல்லது தொலைந்தாலும் பரவாயில்லை என்ற பொருட்களை தொடக்கத்தில் கொடுத்துப் பார்க்கலாம்தானே?. நானும் ஈஷாவும் சேர்ந்து பயணிக்கும்போது பொதுவாக பயணச்சீட்டை ஈஷாவிடம் கொடுத்து விடுவேன்.  அதை அவள் இறுகப்பிடித்துக்கொண்டு, பெரும்பாலும் எப்போதும் அதை ரொம்பப் பத்திரமாக வைத்துக்கொள்வாள். பேருந்துப் பயணம் முடிந்து ஒரு மணிநேரத்திற்குப் பின்பும் அவள் கசங்கிய பயணச்சீட்டை கையில் வைத்திருப்பதை கவனித்திருக்கிறேன். ஏன் என்று கேட்டால் 'நீ எப்போதும் அதை திருப்பிக் கேட்டதில்லை' என்று சொல்வாள். அவள் ஒன்று அல்லது இரண்டுமுறை அதை அவள் கையிலிருந்து தவறவிட்டிருக்கிறாள்' அதைப்பற்றி அவள் தவறாக உணராமல் நான் பார்த்துக்கொண்டேன்.

ஈஷா இயற்கையாகவே உயரத்தில் ஏறுபவள். தென்னைமரத்தில் ஏறி அம்மாவுக்காக தேங்காய் பறித்து தரவேண்டும் என்பது அவளுடைய கனவுகளில் ஒன்று.  ஏறும்போது எப்போதும் கால்களின் பிடியை ரொம்பச்
சரியாக பார்த்துக்கொள்வாள். ஒரு தடவை 7 அடி உயர ஜங்கிள் ஜிம்லிருந்து தவறி கீழே விழுந்துவிட்டாள். ஈஷா ரொம்ப நேரமாகியும் அழுகையை நிறுத்தாததால் நானும் ராஜீவும் கவலை கொள்ள ஆரம்பித்தோம். அவளை
பேசவும் நடக்கவும், கை காலை ஆட்டவும் செய்து அவளுக்கு பெரியகாயம் ஏதுமில்லை என்பதை உறுதி செய்துகொண்டோம். கொஞ்சநேரம் கழித்து ஈஷா அழுகையை நிறுத்தி இயல்பாக உணர்ந்தாள். எந்த இடத்திலிருந்து விழுந்தாலோ அதை அவள் திரும்பிப் பார்த்தாள். 'மறுபடியும் நீ ஏறினாள், கீழே விழுந்து விடுவாய்' என்று நாங்கள் சொல்ல நினத்தாலும்,சொல்லாமல் எங்களை கட்டுப்படுத்திக்கொண்டோம். 'மறுபடியும் ஏறுவதற்கு முயற்சி செய்ய விரும்புகிறாயா, இந்த முறை இன்னும் கவனமாக'? என்று கேட்டோம். அவள் உற்சாகத்துடன்  ஆமா' என்று தலையாட்டினாள்.    இந்த முறை இன்னும் இறுக்கமாக கம்பியை பிடித்துக்கொண்டு கொஞ்சதூரம் ஏறினாள்.

குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில் இயல்பாகவே தங்களது சொந்தத் திறமைகளை நம்புவதற்கும், மறுபடியும் முயற்சி செய்வதற்கும் விரும்புவார்கள். நாம் அவர்கள் வழியில் குறுக்கிடாமல், நம்பிக்கை அவர்களுக்குள் உருவாவதற்கு உதவ முடிந்தால், அவர்கள் வளரும்போது, ' சிலந்தியிடமிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்ட ராஜா, பலமுறை முயற்சி செய்து அதன்பின் போரில் வென்ற கதையை'  நாம் அவர்களிடம் சொல்லவேண்டியதே இருக்காது. சிலநேரங்களில் தங்களால் சிலவற்றை செய்யமுடியவில்லை என்று அவர்கள் தளர்ச்சியடையலாம்.

சின்னக்குழந்தை motor skills போதுமான அளவு வளர்ச்சியடையாதபோது, பாட்டிலின் மூடியை திறக்க முயற்சி செய்யும் செயலைப்போல, அந்த மாதிரியான தருணங்களில், அவர்கள் தளர்ச்சியடையும் வரை பொறுமையாக
இருந்து  அதற்குப்பின் அவர்களாகவே அதைத் திறக்க மென்மையாக உதவலாம். ஓவ்வொரு முறையும் குழந்தைகளை நம்பிக்கையுடன் உணரச் செய்யும்போது அவர்கள் தங்களை இன்னும் அதிகமாக நம்புவதற்கு கற்றுக் கொள்வதோடு, இயற்கைவழிக் கற்றலுக்குள்ளும் நுழைகிறார்கள்.

3.   மதிக்கப்படுவதற்க்கான தேவை :- 
குழந்தைகளும் மனிதர்களே. அவர்கள் யார் என்ற உணர்வுடன் மற்றும்
அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதுவரை.  அவர்களும் நம்மைப்போலவே.  பெரும்பாலான நேரங்களில், இதை நாம் உணர்வதேயில்லை, அவர்களை பொருட்படுத்தத் தேவையில்லை என்றே
எடுத்துக்கொள்கிறோம். குழந்தைகள் குறிப்பிட்ட உணவுகளை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று நம்மிடம் சொல்லும் போது, நாம் பொதுவாக அவர்களுக்கு வேறு மாற்று உணவுகளை கொடுப்பதில்லை. அவர்களை
மிரட்டியோ அல்லது லஞ்சம் தருவதாக சொல்லியோ குறிப்பிட்ட உணவுகளை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உண்ணச்சொல்கிறோம். இது நமக்கு இடைக்கால அளவில் பயன்தந்தாலும், தொலைநோக்கில் பாதிப்புக்களையே ஏற்படுத்தும். ஆதாரப்பூர்வமாக, சில ஆராய்சியில் தெரிவது, பெண்குழந்தைகள் யாரெல்லாம் கட்டாயப்படுத்தப்பட்டு உணவு உண்ண வைக்கப்பட்டபோது, தங்களுக்கு 'வேண்டாம்' என்று சொல்வதற்கு சிரமப்பட்டார்களோ, அவர்கள் பெரியவர்களான பின்பு, இதனால் எல்லாவிதமான பலவந்தப்படுத்தலுக்கு/சுரண்டலுக்கு  மிக  எளிதாக பணிந்துவிடுகிறார்கள்.

மறுபடியும், குழந்தைகளை மரியாதையாக நடத்துவதென்பது, அவர்களின் எல்லாப் பிடிவாதங்களுக்கும் உடன்படுவது என்று அர்த்தமல்ல. உண்மையாக அவர்களை மதிப்பதென்பது, அவர்கள் மற்றவர்களையும் மதிக்கவேண்டும் என்பதை காட்டுவதாகும்.

சரிசமமான பங்களிப்பில், பெற்றோர்கள் தங்கள் மரியாதையை மரியாதைப்பூர்வமாக பெற்றுக்கொள்வதற்கு கற்றுக்கொள்ளும் போது மட்டும்தான், குழந்தை தன்னிடமும், பிறரிடமும் மரியாதையுடன் இருப்பதற்க்கு உண்மையில் கற்றுக்கொள்ளும்.

4. பெரியவர்களின் உலகத்தில் கலந்துகொள்வதற்கும், பங்களிப்பதற்குமான தேவை : 

பெரியவர்களாகிய நாம்தான் குழந்தைகளின் உலகை நம்மிடமிருந்து பிரித்து வைத்திருக்கிறோம். விளையாட்டிலிருந்து வேலையை. குழந்தைகளுக்கு ஒரு உலகம் மட்டுமே தெரியும் - தேடுவதற்கும், உருவாக்குவதற்கும், கொண்டாடுவதற்கும், மற்றும் சேர்ந்து செயல்படுவதற்க்குமான ஒரு அர்த்தமுள்ள  உலகம்.

அவர்களுக்கு ஒரு வாழ்க்கை மட்டுமே தெரியும். அங்கே வேலையும் விளையாட்டும், வாழ்வதும், செயல்படுவதும், மற்றும் கற்றுக்கொள்வதும் எல்லாமே ஒன்றுதான்.

 தாங்கள் செய்துகொண்டிருக்கும் செயலில் ஆழ்ந்துள்ள பெரியவர்களை கவனிப்பதன் மூலமாகவே குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகள் அவர்களைச் சுற்றிநடக்கும் எல்லாவற்றையும் பார்ப்பதிலும், அவற்றில் கலந்துகொள்வதிலும் மிகுந்த ஆர்வமுடன் இருப்பார்கள்.   ஆனால் குழந்தைகள் பிறந்தகணம் முதலே இன்றைய வீடுகள் எரிச்சலையே அளிக்கின்றன.  எல்லாவற்றுக்கும் முதலாக அவர்களைச் சுற்றி எல்லாப்பக்கங்களிலும் சுவர்களால் சூழப்பட்ட மூடிய அறைகளிலேயே அவர்களை நாம் வைத்திருக்கிறோம்.  அவர்கள் சுவர்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை எண்ணி நாம் கவலைகொண்டு, அவர்களுக்கு அதீத வண்ணங்களுள்ள பொம்மைகளையும் மற்றும் பிரகாசமான வண்ணங்களால் அவர்களின் அறைகளில் வண்ணமடிக்கிறோம். இந்த
வண்ணங்கள் அதீதமான உணர்வெழுச்சியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பார்வையின் உணர்வுகளை பாதிப்புக்குள்ளாக்குகின்றன. அதீத உணர்வெழுச்சி செயற்கையான வழியில் குழந்தையை உற்சாகப்படுத்தி,
 மூளை வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கைக்கு மாற்றாக, பாதிப்பையே ஏற்படுத்தும்.

குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போது மற்றும் நடக்க ஆரம்பிக்கும்போது, எல்லா ஜன்னல்களும் அவர்களின் பார்வைக்கு எட்டாத அளவிலேயே இருப்பதை தெரிந்துகொள்கின்றன. கதவுவழியைத் தாண்டிச் செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது.  சாப்பிடும் மேஜை, சமையல் செய்யுமிடம், மேஜைகள் எல்லாமே அவர்களுக்கு எட்டாத இடத்தில். உலகத்தை புலன்கள் வழியாக அறிய, வெளியில் செல்லக் காத்துக்கொண்டிருக்கும், அந்த வயதில் இந்த இயற்கைக்கு புறம்பான 'அடைத்து வைத்திருப்பது', எவ்வளவு எரிச்சலைத் தரும் என்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமா?  சுவர்களிலிருக்கும் 'plug points' அபாயகரமானது அதனால் தவிர்க்கப்பட வேண்டியதும் கூட. காலனி ஸ்டாண்டில் இருக்கும் காலணிகள் மட்டுமே பெரும்பாலான நேரங்களில்
அவர்களின் பார்வை மட்டத்தில் இருப்பது - அதுவும் தவிர்க்க வேண்டியதே.  மேஜையின்மீது  இருக்கும் எல்லாப் பொருட்களையும் தொட, ஜன்னலின் மீதேறி வெளியில் பார்க்க தூண்டுதல் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால்
அவைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன.  எவ்வளவு எரிச்சலிருக்கும் !

அவர்கள் கொஞ்சம் வளர்ந்தபோது, பெரியவர்களின் உலகத்தில் பங்கெடுக்க
விழையஆரம்பித்து , நம்முடன் சேர்ந்து செயல்புரிவதன் வழியாக கற்றுக் கொள்வார்கள். அனால் நகரத்து இளைஞர்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் ஆர்வமூட்டும் எதையுமே இனிமேல் செய்யப்போவதில்லை.

பெரும்பாலான வேலைகளை செய்வதற்கு இயந்திரங்களும், வேலையாட்களும்  நமக்கிருக்கிறார்கள். மற்றும் சமையல் அறைக்குள் நுழைவது 'குழந்தைகளுக்கானதல்ல' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேளிக்கைகளில்  (தொலைக்காட்சி, பேஸ்புக், கணிப்பொறி, வாட்ஸ் ஆப், அலைபேசி) ஈடுபட்டு நமது போரடிக்கும் நேரங்களை கொல்ல முயற்சி செய்யும் பெரியவர்களான நம்மைப் போலவே, குழந்தைகளுக்கும்
நிறைய பொம்மைககளை நாம் வாங்கித்தந்திருக்கிறோம். ஆனால் இவைகள் கொஞ்ச நேரத்திற்கு அவர்களை ஆக்கிரமித்துக் கொள்வது போலத் தோன்றும்.  அவைகள் எப்படித் தீங்கு விளைவிக்கமுடியும் என்று நம்மில் யாராரெல்லாம் பார்க்க முடிகிறதோ, 'கல்விக்கான பொம்மைகள் மற்றும் குறுந்தகடுகளை'  வாங்கித்தந்து, அதைப் பயன்படுத்துவதன் மூலமாக நமது குழந்தைகள் ஏதேனும் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.  இந்நாட்களில் இது 'Edutainment' என்று சொல்லப்படுகிறது.  குழந்தைகளின் மனதுகள் அமுக்கப்பட்டு, வசியப்படுத்தப்பட்டு மற்றும் திகைக்கவைக்கப்பட்டு மற்றும் பெரும்பாலான நேரங்களில் இவைகளுக்கு அடிமைப்படுத்தவும் செய்கிறது.
அதனால் அவர்களின் தேவைகள் நிறைவுசெய்யப்படுகின்றன என்று அர்த்தமில்லை. ஒரு குழந்தை 'jung food - குப்பை  உணவுகளுக்கு' அடிமையாகலாம். அதற்காக ஆசைப்படலாம்,  ஏங்கலாம், ஆனால் அது குழந்தையின் உண்மையான தேவையை நிறைவு செய்கின்றது என்று அர்த்தமில்லை.

இயற்கைவழிக் கற்றலில் ஆர்வமுள்ள ஒரு பெற்றோராக,  என் சொந்த வாழ்க்கையை, நான் எப்படி வாழ்கிறேன் என்று பார்த்துக்கொள்வதற்க்கான தேவை எனக்கு அதிகமாகவே இருக்கின்றது.  எங்கள் வீட்டில் 'தொலைக்காட்சி'யில்லை. பயன்படுத்திவிட்டு கொடுக்கப்படும் அல்லது அன்பளிப்பாக கொடுக்கப்படும் பொம்மைகளைத்தவிர வேறு பொம்மைகளை நாங்கள் வாங்குவதுமில்லை.

ஈஷாவிடம் பொம்மைகளுடன்  விளையாடவா அல்லது அம்மா அப்பாவுடன் சேர்ந்து வேலைசெய்யவா, இதில் எதைச்செய்ய விருப்பம் என்று கேட்கும் போது, பெரும்பாலான நேரங்களில் ஈஷா இரண்டாவதையே தேர்வு செய்வாள்.

இரண்டரை வயதில், அவளால் செய்யக்கூடிய விஷயங்களின் பட்டியல் இதோ,  அவளால் இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, அதில் மாவு ஊற்ற முடியம்.  ரொட்டி உருட்டி, பின்பு அதை மெல்லிதாக மாற்றுவதற்கு என்னிடம் கொடுக்க அவளுக்குப் பிடிக்கும்.  கழுவிய பாத்திரங்களை அடுக்குவதற்கும், அவற்றை அததற்க்கான இடத்தில் வைப்பதற்கும் அவளுக்குப் பிடிக்கும். அவளுக்கு சிறய துணிகளை மடிக்கப் பிடிக்கும். துவைத்த துணிகளை கொடியில் போடவும், பின்பு அவற்றின் மேல் கிளிப் மாட்டவும் அவளுக்குப் பிடிக்கும். அவளுக்கு கூட்டவும் துடைக்கவும் பிடிக்கும்.   அவளுக்கு கோலம் (ரங்கோலி) போடப் பிடிக்கும், கலர் மற்றும் அரிசிப்பொடியுடன் விளையாடுவது அவளின் விருப்பமான நேரமாக இருக்கும்.  ஊறவைப்பதற்காக அரிசி மற்றும் மாவை அளப்பது அவளுக்குப் பிடிக்கும். அவளால் மெலிதான காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்ட முடியும். பின்பு அவற்றை சிறுதுண்டுகளாக வெட்ட நான் எடுத்துக்கொள்வேன். அவளுக்கு செடிக்கு தண்ணீரூற்றப் பிடிக்கும்.

5. அவர்களுக்கான நேரத்திற்கும் மற்றும் இடத்திற்கான தேவை : 
குழந்தைகள்  எதைச்செய்துகொண்டிருந்தாலும் அதில் ஆழ்ந்திருக்க, அவர்களை அவசரப்படுத்தாத அல்லது 'போதும், இப்போது இதைச் செய்' என்று சொல்லாத,  அவர்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கான தேவை இருக்கிறது ஒரு பெற்றோராக, இது எளிதானதல்ல என்று எனக்குத் தெரியும், குறிப்பாக எதையாவது முடிக்கும் அவசரத்தில் இருக்கும் போது அல்லது எங்காவது செல்ல வேண்டியிருக்கும்போது . ஆனால் இவைகள் விதிவிலக்காக மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய விதிமுறையாக அல்ல. (இந்த மாதிரியான தருணங்களில், நாங்கள் ஏன் அவளை, அவள்
செய்துகொண்டிருக்கும் செயலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியிருக்கிறது என்று விளக்குவதற்கும், அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்கும்,  நாங்கள் கவனம் எடுத்துக்கொள்வோம் ) .

அப்படி இல்லையெனில்,  அவள் கலர்ப் பொடிகளுடன் சில மணிநேரம் விளையாட விரும்பினால், அதை அவள் விருப்பப்படியே விட்டுவிடுவோம்.  இதைச் சொன்னோலும் , தேவையில்லாமல் குறுக்கிடும் மற்றும்
'எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள'  மற்றும் 'கட்டுப்படுத்த' விரும்பும் அம்மாவாக இருக்கும் மனோபாவம் எனக்கும் இருக்கிறது. எந்த குறிப்பிட்ட காரணமுமில்லாமல் ஒரு செயலை முடிக்கவிடாமல் தடுப்பது, குழந்தைகளுக்கு மிகவும்  வெறுப்பாக இருக்கும்.

6.  உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான தேவை : 
உணர்வுகள் வெளிப்படும் வடிவம் ஆடுவதாகவோ, பாடுவதாகவோ, பேசுவதாகவோ, வரைவதாகவோ, எழுதுவதாகவோ மற்றும் வண்ணமிடுவதாகவோ இருக்கலாம்.  அடிக்கடி குழந்தைகள் எப்படி
நடனமிடுவது, பாடுவது, பேசுவது, வரைவது, எழுதுவது மற்றும் வண்ணமிடுவது என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறார்கள்.  அவர்களுக்கு விதிமுறைகள் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் இந்த விதிமுறைகளைத் தாண்டி உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பும்போது, அவர்கள் 'சரிசெய்யப்படுகிறார்கள்'.

ஒரு சின்னப் பெண்குழந்தை அழகான உடலசைவுகளை வெளிப்படுத்தி நடனமிட்டுக்கொண்டிருக்கும்போது, அவளின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக 'இதை இப்படிச் செய்யக்கூடாது'  தயவுசெய்து உன்னுடைய அசைவுகளை
மாற்று, நீ அதைத் திரும்பத்திரும்ப நிறையமுறை செய்துவிட்டாய், இப்படிச் சொல்லிக்கொண்டேபோவதை நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

தொடர்ச்சியாக 'சரி செய்துகொண்டிருக்கும்' ,  'கட்டளையிட்டுக் கொண்டிருக்கும்'  இந்தக்குரல் ஒருபோதும் அவர்களுக்கு உதவிசெய்யப்போவதில்லை. வெகுசீக்கிரமாகவே, இரைச்சலுள்ள  மனதின் வழியாக வெளிப்படும் உணர்வு வெளிப்பாட்டின் எல்லாவடிவங்களும், 'பொதுவாக ஏற்கப்பட்ட மற்றும சரிபார்க்கப்பட்டவற்றின் அடிப்படையில்'  தங்களை நடத்த  பயிற்றுவிக்கப்படும்.  அது ஒருபோதும் உண்மையான கலையாக முடியாது.

கலைஞன் (அவனின் இரைச்சலான சின்ன மனது) காணாமல் போகும் போது மட்டுமே உண்மையான கலை வெளிப்படும்.

வண்ணமடிப்பதற்கும், வரைவதற்கும், கிறுக்குவதற்கும், மற்றும் எழுதுவதற்கும் ஒரு சுவரை வீட்டில் ஒதுக்கிக்கொடுத்தால் எப்படியிருக்கும்?.  உங்களுக்கு 'டைல்ஸ் இருக்கும் பால்கனி தரை'  இருந்தால், சாக்பீசால் வரைவதற்கு இது ஒரு மிகச்சிறப்பான இடமாக இருக்கும். நமது குழந்தைகளின் உணர்வுவெளிப்பாடுகளை, 'சரிப்படுத்தவோ அல்லது விமர்சிக்காமலோ' நாம் இருந்தோமென்றோல்,  அது அதற்கான தனித்துவமான வடிவத்திலும்,  பாணியிலும் உயிர்ப்புடன் வெளிவரும்.

குழந்தைகள் அவர்களின் 'இலக்கணத்தை மற்றும் விதிகளை'  சரியான நேரத்தில், சரியான வேகத்தில் அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள்.  அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பிக்கும்போது
 சரிப்படுத்துவதற்கான நேரமல்ல.

அவர்களின் உலகத்தில் 'Door' என்பதற்கு 'Dor'  என்பது சரியான எழுத்துக்கூட்டே.  மற்றும் 'Mother' என்பதற்கு  'Madar' என்பது சரியான எழுத்துக்கூட்டே.   ஈஷா இப்போதுதான் ஆங்கிலம் பேச ஆரம்பித்திருக்கிறாள்.  "I no come play" என்று அவள் சொல்லும்போது "Oh, you don't want to come play now" என்று அவளிடம் நாங்கள் கேட்போம். அவள் "Yes, I don't come now!" என்று சொல்வாள்.   இது மிகச்சரியானதுதான் என்று பார்ப்பதற்கு நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்  :) ..

குழந்தைகள் உடலின் வழியாக அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான தேவையிருக்கிறது. அவர்கள் ஓடியாடி சுதந்திரமாக விளையாடுவதற்கும், தங்களுக்குள்ளிருந்து  கத்துவதற்குமான வெளி அவர்களுக்குத் தேவை.  இது பொதுவாக திறந்தவெளிகளே. எப்போதெல்லாம் ஈஷா ஓடியாட, சத்தம்போட்டு விளையாட விரும்பும்போது,

அது யாரையாவது தொந்தரவு செய்யாதவரை அவள் விளையாடலாம்.  அதானால் நாங்கள் உண்மையில் அவளை அமைதியாகயிருக்க கேட்க்கும் போது, அவள் பொதுவாக அதை மதித்து ஒத்துழைப்பாள்.

7. உருவாக்குவதற்கான தேவை : 
குழந்தைகளுக்கு தங்களை (தங்களின் உடல்களை, தங்களின் குரல்களை, மற்றும் தங்களின் மனங்களை)  வைத்து உருவாக்குவதற்கான ஒரு அடிப்படைத்தேவை இருக்கிறது.   அவர்களிடம் கொடுக்கப்படும் ஆயத்த - ரெடிமேட் பொம்மைகளைவிட அவர்களுக்கான பொம்மைகளை அவர்களே சொந்தமாக உருவாக்க விரும்புவார்கள்.

அவர்களிடம் களிமண்ணையும் அல்லது  கார்ட்போர்ட் அட்டையை (கத்தரியுடன்) கொடுங்கள் - அவர்களின் சொந்த பொம்மைகளை அவர்களாகவே உருவாக்கும்போது ஏற்படும் உற்சாகத்தைப் பாருங்கள். அவர்கள் உருவாக்கும் இந்த பொம்மைகள்தான், அவர்களின் உண்மையான உணர்வுகளுடன், அவர்கள் தொடர்புபடுத்திக்கொள்ளும் நிஜமான பொருட்கள்.
படைப்பாற்றலுள்ள வேலையில் (உணவு தயாரிப்பது, தோட்டத்தில் வேலை செய்வது, போன்றவற்றில்) ஈடுபடுவதுகூட இந்த உண்மையான தேவையைப் பூர்த்தி செய்கின்றது.

பொம்மைகளை உருவாக்க arvindguptatoys.comல் நிறைய செய்முறைகள் கிடைக்கின்றன. படைப்பதில்  - உருவாக்குவதில் உள்ள மகிழ்ச்சி 'கதைகளுக்கும்' மற்றும் 'பாடல்களுக்கும்' பொருந்தும். சிலநேரங்களில் ஈஷாவும் நானும் செய்யும் உரையாடல்கள் பாடல்களைப்போல இருக்கும்.   அவளுக்கு பிடித்த, பின்வரும் பிரபலமான  டீயூன்களில் - டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார், அம்மா இங்கே வா வா ...

8.    இயற்கையுடன் இணைந்து இருப்பதற்கான தேவை :
குழந்தைகள் இயற்கையுடன் இணைந்து இருப்பதற்கான அடிப்படைத் தேவை
இருக்கிறது.  இயற்கை காடுகளில் மட்டும் இருப்பதில்லை. மழையிலும், தோட்டத்தின் மண்ணிலும், தெருஓரங்களிலிருக்கும் செடிகளிலும், விதைகளிலும், மரங்களிலும், நமது ஜன்னலுக்கு வருகைதரும்
பறவைகளிலும், நமது வீட்டினுள் சுற்றித்திரியும் பல்லிகள், மற்றும் எறும்புகளிலும், ஜன்னலின் வழியாக வழிந்துகொண்டிருக்கும் சூரியஒளியிலும்,  நமது மாடியில், இரவுவானில் நிறைந்திருக்கும் நட்சத்திரங்களிலும்,

நிலவிலும், நமது வீட்டினுள்வரும் செந்தூரன் மற்றும் அந்துப் பூச்சிகளிலும், வழிதவறி வந்துவிடும் வண்ணத்துப்பூச்சியிலும் தான் இயற்கை வாழ்கிறது .   அவைகளை நம் வாழ்கையினுள் வரவேற்கவும

பெற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கும்போது மட்டும்தான், இந்தப் பட்டியல் முடிவில்லாமல் நீளும்.

ஆனால் நாம் அடிக்கடி  நமது  குழந்தைகளிடம் மண் 'அழுக்கானது', பல்லி 'அருவருப்பானது', மழை 'நமக்கு நோயை வரவைக்கும்', பூச்சிகள் நம்மை கடித்துவிடும், சூரியஒளி 'நம்மை நிறம் மங்கச் செய்துவிடும்' என்று சொல்கிறோம். ஆனால் நாம் செய்துகொண்டிருப்பதெல்லாம் இயற்கையை நோக்கி பகைமையை அவர்களினுள் உருவாக்கிக் கொண்டிருப்பதைத்தான்.

நாம் சிறுவர்களாக இருக்கும்போது, இயற்கையுடன் இணைந்து இருப்பதற்கான நமது தேவை நிறைவேறாமல், குறுக்கப்பட்டதால்தான், நாம் இதை நமது குழந்தைகளுக்கு செய்துகொண்டுஇருக்கிறோமா என்று நம்மையே கேட்டுக்கொள்வது பயனுள்ளது.

ஈஷாவுக்கு பல்லிகள் மீது மிகுந்த ஆர்வமுண்டு. அவள் ஒரு பல்லியை சுவரில் பார்த்துவிட்டால், குட்டிப்பாப்பா பல்லியை தேடிக்கொண்டு வீட்டைச்சுற்றிவருவாள். அவளுடைய உலகத்தில் ஒரு பெரிய விலங்கு இருந்தால் (அது மாற்றமில்லாமல் அம்மா), கண்டிப்பாக பாப்பா அதனருகில் அங்கே எங்கேயோ தானிருக்கும்.  இன்னொரு பெரியவிலங்கை பார்க்கமுடிந்தால், அதை 'அப்பா' என்று எண்ணிக்கொள்வாள்.  எங்கள் நகர வீட்டிலிருந்து எல்லா சின்ன வழிகளிலும் இயற்கையுடன் இணைந்திருக்க நாங்கள் முயற்சிசெய்ததுபோக, நாங்கள் நீண்ட நடைகளை சென்னையின் பசுமை நுரையீரலாகயிருக்கும் IIT Madras and Theosophical Society வளாகங்களில்
மேற்கொள்வோம்.  ஈஷா எல்லாவிதமான விஷயங்களுக்கும் - புள்ளிமான் முதல் பொதுவாக பார்வையில்படாமல் செல்லும் சிறிய உயரினங்கள் வரை எங்களை வழிநடத்திச் செல்வாள். இந்த சிறப்பு நாட்களில் நாங்கள் நன்றாக
உணவருந்தி, உற்சாகத்துடன் மற்றும் வேறு எதுவும் திட்டமிட்டிருக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம், அதனால் எதையும் அவசரமாகக் கடந்து செல்லவோ, வேறு எங்கேயோ செல்லவேண்டுமென்று நினைக்கவோ
வேண்டியிருக்காது. ஒரு மூன்று கிலோமீட்டர் நடைக்கு மூன்று முதல் ஐந்து மணிநேரம் வரை எடுத்துக்கொள்வோம்.

9.  அன்பிற்கும் அரவணைப்பிற்குமான 

எல்லாக்குழந்தைகளுக்கும்  அரவணைப்புடன் இருப்பதற்கான அடிப்படைத்தேவை உள்ளது. அப்படி அரவணைப்பில் இருக்கும்போது அவர்கள் பாதுகாப்பாக, பத்திரமாக மற்றும் அன்புடன் உணருவார்கள். இந்த அடிப்படைத்தேவையும் நிறைவேறுவது மிகவும் முக்கியமானதாகும். இதிலிருந்து செல்லும்போது அவர்கள் சோகத்தை அழுகையை கோபத்தை இன்னபிறவற்றை அவர்கள் வெளிப்படுத்தும்போதெல்லாம் ஆழமாக ஏற்றுக்கொள்வதாகும்.  "உன்னால் அந்தப் பந்தை எடுக்கமுடியவில்லை 
என்பதால்தான் நீ கோபமாக இருக்கிறாயா?" நான் புரிந்துகொள்கிறேன்.  நான் விரும்பும் ஏதாவது எனக்கு கிடைக்காதபோது நானும் அதுபோலவே உணருகிறேன்.

"ஒப்புக்கொள்வது, சொல்வதற்கு உதவுவது, அவர்களின் விரும்பதகாத உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்வது" அவர்களுடன் தொடர்புகொள்ளக் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு உதவும்,  மற்றும் இந்த உணர்ச்சிகளை
சக்திமிக்க, ஆக்கப்பூர்வமான, மற்றும் விடுதலைக்கான வழிகளில் பயன்படுத்தவும் உதவும்.    

10.   மக்களுடன் இணைந்திருப்பதற்கான தேவை :

நாம் சில குழந்தைகளை வெளிப்படையானவர்களாகவும், மற்றும் சில
குழந்தைகளை இயற்கையாகவே அமைதியானவர்களாகவும் பார்க்கமுடியும். வெளிப்படையான குழந்தைகள் பொதுவாகவே மற்ற குழந்தைகளுடனும், மக்களுடனும் இணைந்திருப்பதற்கான தேவையை எளிதாக புரிந்துகொள்ளமுடியும்.  எப்படியிருந்தாலும் அமைதியான குழந்தைகளுக்கு மக்களுடன் சேர்ந்திருப்பதற்கான தேவை வேறுமாதிரியானது.   எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையுடன் இணைந்து உணருவதற்கான ஒரு
தேவையிருக்கிறது.  அமைதியான குழந்தைகள், மனிதர்களுடன் வெளிப்படையாகவோ, சொல்மூலமாகவோ இணைந்திருப்பதற்குதான் தயாராகயில்லை. அவர்களை தனியாகவிடும்போது (அதிகமாக தொந்தரவு
செய்யாதபோது), ஆனால் புரிதலுடனும், அன்புடனும் இருக்கும்போது, சேர்ந்திருப்பதற்குத்தான் அவர்களும் விரும்புவார்கள்.  அவர்களுக்கான தனித்துவமான வழியில் அவர்கள் பூப்பார்கள். ஒரு மொட்டு மிக அமைதியாக
மலர்வதைப்போல.

ஆனால் இது மிகவும் நுட்பமான இடமும்கூட. நமது வாழ்க்கையில் எல்லாவிதமான மனிதர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளை மரியாதையாகவும் அன்பாகவும் நடத்துவதற்கான ஒரு தேவை இருக்கிறது. இது இருக்கும் குடும்பங்கள், சமூக இடங்களிலெல்லாம் குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஊக்கமாகவும் உணருகிறார்கள்.  ஈஷா ஞாபகம்வைத்து மிக விருப்பத்துடன் கூட்டிச்செல்லக் கேட்க்கும் இதுபோன்ற அர்த்தமுள்ள இடங்களை நகரங்களில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

பெரும்பாலான வீடுகள் பொதுவாகவே தொலைக்காட்சியின் இரைச்சலால் அலறுகின்றன.  சிறு குழந்தைகள்  (அவளின் விளையாட்டுத்தோழர்கள்) ஆக்ரோஷமானவர்களாக இருக்கிறார்கள்.  பெரியவர்கள் அவளுடைய
இடத்தைமீறி, கடுமையாக பேசுகிறார்கள்.  ஈஷா நிறையவிதமான குழந்தைகளுடன் விளையாடுகிறாள் - எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் நண்பர்களின் குழந்தைகளுடன்.  சந்தோசமும் சிரிப்பும் கலந்த இனிய
விளையாட்டு நேரங்கள் அவர்களுக்கும் இருக்கிறது. அதே சமயத்தில் பெரும்பாலான நேரங்களில் 4 அல்லது 5 வயது குழந்தைகள், பெரியவர்கள் அவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்களோ (கோபமேற்படுத்துவது,
கையாள்வது, லஞ்சம்கொடுப்பது, சரிசெய்வது, அவமானப்படுத்துவது) அதுபோல ஈஷாவிடம் நடந்துகொள்கிறார்கள்.  ஞாபகமிருக்கட்டும், குழந்தைகள் பெரியவர்களின் வழிகளையே பின்பற்றுவார்கள்.

அதனால் நமக்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருக்கலாம். அதன்காரணமாகத்தான் பெற்றோர்கள் யாரெல்லாம் தங்கள் குழந்தைகளை, அவர்களின் வாழ்வில் தங்களின் பங்கை வேறுவிதமாக பார்க்கிறார்களோ,
அவர்களெல்லாம் ஒன்றாகச் சந்திப்பதும்,  இணைந்திருப்பதும் முக்கியமானது.

நீ அவளை இவ்வளவு பாதுகாப்பாக வளர்த்தேயானால், எல்லாவிதமான மனிதர்களையும் எதிர்கொள்ள எப்படி கற்றுக்கொள்வாள் ?.

அவளை உடலளவிலோ, மனதளவிலோ பாதுகாத்துக் கொள்வதற்கு  அவள் மிகவும் சிறியவள், எளிதாக பாதிக்கப்படக்கூடியவள். அவள் சிறந்த ஆற்றலையுடைய சின்னச்சிறிய செடி போல, ஒரு கடுகளவேயுள்ள
ஒரு சின்னச்சிறிய விதை ஆலமரமாக வளரக்கூடிய திறமையை தன்னுள்வைத்திருப்பதைப்போல. இந்த அடித்தளம்தரும் வருடங்களில், ஆபத்திலிருந்து விலகி பாதுகாப்பாகயிருப்பது முக்கியமானது. நாம் நர்சரியில் விதை விதைப்பது அல்லது சின்னச்செடியை சுற்றி வேலி போடுவதைப்போல. நம்பிக்கை என்னவெனில்,  அவள் வளரும்போது இந்தப் பாதுகாப்பான, பத்திரமான அடித்தளத்திலிருந்து உலகை அதிக நம்பிக்கையுடனும், உறுதியுடனும், அன்புடனும் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்வாள்.  ஒரு உதாரணம் இங்கே.

இந்தியப் பெற்றோர்களுக்கு பாப்பாக்கள் மற்றும் சிறிய குழந்தைகளின் கன்னத்தைக்கிள்ள பெரியவர்களான நாம், எப்படி விரும்புவோம் என்று ரொம்ப நன்றாகவே தெரியும். ஈஷாவும் நானும் பேருந்து நிறுத்தத்தில்
காத்துக்கொண்டிருக்கும்போது, கடந்து செல்கிறவர்கள் தயங்காமல் ஒரு நிமிடம் நின்று "So Cute" என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ளிவிட்டுச் செல்வார்கள்.

ஈஷாவிடம் ஒவ்வொருமுறையும் யாராவது இதைச் செய்யும்போது, அவள் அதை வெறுப்பாள். நீங்கள் அதை நினைத்துப் பார்த்தீர்களானால், இது உண்மையில் குழந்தைகளுக்கான வெளியில் உடலளவில் மீறலாகும்.

அவர்கள் வளரும்போது இது ஒரு விதிமுறை என்றே நினைத்துக் கொள்வார்கள். முன்பெல்லாம், ஒவ்வொருமுறையும் யாராவது ஒருவர் இதைச் செய்தபோது, அவள் வருத்தமாகி, அழுவாள். பின்பு நாங்கள் முன்சென்று அவளிடம் அதைச் செய்யவேண்டாம் என்று மக்களிடம் சொல்வோம்.  (நம்மை நம்புவர்களுக்காக, நம் பாதுகாப்பை எதிர்பார்ப்பவர்களுக்காக, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்காக பேசுவது நமது கடமை).

அவள் கொஞ்சம் பெரியவளாக வளர்ந்தபோது, மக்கள் உண்மையில் அதைச்செய்வது, அவளை அவர்களுக்கு பிடித்ததனால்தான், மற்றும் அவளுக்கு அது பிடிக்காதென்று அவர்களுக்குத் தெரியாத காரணத்தால்தான், அப்படிச் செய்கிறார்கள் என்று நாங்கள் அவளுக்கு விளக்கிச்சொல்ல ஆரம்பித்தோம்.  'நீயே அதை அவர்களிடத்தில் சொன்னால் எப்படியிருக்கும்?' . மக்கள் உன்னிடம் தொடர்புகொள்ள விரும்பினால், எதைச்செய்வதை நீ வசதியாக உணருகிறாய்?.  என்றபோது,   "அவர்கள் என்னுடன் கைகுலுக்கலாமே" என்று சொன்னாள்.

அதனால் இந்த நாட்களிலெல்லாம் 'அப்படிப்  பண்ணாதீங்க. எனக்குப்  பிடிக்காது' என்று மக்களிடம் அவள் சொல்வாள். பின்பு மாற்றமில்லாமல் மக்கள் ஆச்சர்யத்துடன் பின்வாங்கி, சிலநேரங்களில் புண்பட்டு, சிலநேரங்களில் அவளின் துணிவைப் பாராட்டுவார்கள். நாங்கள் முன்சென்று 'அவர்கள் அவளுடன் கைகுலுக்கலாமென்று' சொல்வோம். அது எல்லோருடைய முகத்திலும் புன்னகை திரும்பவைக்கும் :)

***

என்னை சுதந்தரமாக மொழிபெயர்ப்புச் செய்யச்சொன்ன கடலூர் சீனுவுக்கும்,  மற்றும்  எல்லாக்குழந்தைகளுக்கும் இம்மொழிபெயர்ப்பை அர்பணிக்கிறேன்.